Monday, November 30, 2015

சங்காபிஷேக வைபவம்


ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே பவமாநாய தீமஹி 
தந்ந சங்க ப்ரேசோதயாத் .சங்கு காயத்ரி..

சங்கமத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யாணாம் ப்ரும்ம ஹத்யாதிகம் தகேத்'
என்பது வேதவாக்கியம்..

கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் அபிஷேகப்பிரியர். சிவனுக்கு சங்கினால் அபிஷேகம் செய்தால் பரமானந்தம் வழங்குவார்.

  சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து கங்கை சடைமுடியானுக்கு,  சங்காபிஷேகம் செய்வது வழக்கம்.

 சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், சங்கு பூஜையை மேற்கொள்கிறார்கள். - 

வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. பகவான் கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு குருக்ஷேத்ரமே நடுங்கியது. 

 சங்கு, இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மையானது. சுட்டாலும் வெண்மை தருவது. மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே அபிஷேகத்திற்கு  சங்கைப் பயன்படுத்தி சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 

சங்கினுள் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் போன்றவற்றை நிரப்பி அபிஷேகம் செய்தாலும், அதை கங்கையாகப் பாவித்தே அபிஷேகம் செய்யப்படுகிறது

. கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

தலைவாழை இலையில் அரிசி போட்டு, தர்ப்பைப் புல் வைத்து சங்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மலர்களால் அலங்கரிக்க வேண்டும். இந்தச் சாதாரண சங்குகளின் நடுவில் ஒரு தட்டில் சிவப்பு நிறத் துணியில் மிகப்பெரிய வலம்புரிச் சங்கை வைத்து, நீர் விட்டு, வாசனை திரவியங்கள் போட்டு அருகில் சிவபெருமானைக் கலசத்தில் வர்ணிக்க வேண்டும்.

அபிஷேக ஆராதனைகள்சங்குகளைச் சுற்று முறையில் அடுக்கி வைத்தும், ஸ்வஸ்திகம், சங்கு, திரிசூலம், சிவலிங்கம், பத்மதளம், வில்வதளம் வடிவங்களிலும் அடுக்கி வைத்து வழிபடலாம்.

சோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும், தீராத நோய்களும் தீரும், துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.


Tuesday, November 24, 2015

மங்கள கார்த்திகை விளக்கீடு






தீப லட்சுமி துதி

1. தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே

ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. 
அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.

2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே

எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே… எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன்.

3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ

 தினமும் தீபம் ஏற்றப்படும் இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல செல்வங்களும் சேரும். (விபூதி என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு). வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள்.

4. கீடா: பதங்கா: மசகாச் ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே ஏ நிவஸந்து ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜோ
பவந்தி நித்யம் ஸ்வசாஹி விப்ரா:

நுண்ணுயிர்கள், புழுக்கள், கொசுக்கள், வண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இவற்றோடு ஆகாயத்தில், பூமியில் நீரில் என எல்லா இடங்களிலும் உள்ள உயிர்கள் எவையானாலும் அவற்றின் எல்லா பாவங்களும் தீபஜோதியாகிய திருவிளக்கினை தரிசிப்பதால் நீங்கும். பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கக்கூடிய ஜோதியை வணங்குகிறேன். பிரகாசமான வாழ்வினை  அளிக்கட்டும்.

 கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. 

விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க

வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
!அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:


நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்  திருக்கார்த்திகை நாளில் பஞ்சமூர்த்திகள் தங்க விமானத்தில் எழுந்தருளி மலை நோக்கி நிற்க, மலைமீது தீபம் ஏற்றும் விழா நடை பெறும். 

 சுவாமியையும், தீபத்தையும், கொடி மரம் அருகே நடனமிடும் 
அர்த்த நாரீஸ்வரரையும் ஒரே சமயத்தில் காட்சி மண்டபத்தில் தரிசிக்கலாம்.
 பஞ்சபூத ஸ்தல லிங்கங்களான  காளத்திநாதர், ஏகாம்ப ரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், சிதம்பரேஸ்வரர், அண்ணாமலையார் என  ஒரே தலத்தில் பஞ்சபூத லிங்கங்களும் உள்ளன.

அருணாச்சலேஸ்வரர், அண்ணாமலை உடையார், திருவண்ணாமலை ஆண்டார், மகா தேவர், ஆள்வார், அண்ணா நாட்டுடையார், கண்ணாரமுதன், கலியுகத்தின் மெய்யன், தியாகன், தேவராயன், பரிமள வசந்தராசன், அபிநய புசங்கராசன், வசநீதராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த வினோதன், வயந்த விழா அழகன் ,திருவண்ணாமலை ஆண்டார், திரு வண்ணாமலை மகாதேவர், திருவண்ணாமலை ஆள்வார், அண்ணா நாட்டு உடையார் எஎன்று பல திருப் பெயர்களுடன் அருள்புரியும் திருவண்ணாமலையாரைத் தரிசிக்கலாம்..,

அருள்மிகு உண்ணாமுலையம்மன் சின்னஞ் சிறு திருவுருவுடன் அருட்காட்சி தரும் அம்மனுக்கு அபிதகுசாம்பாள், உண்ணா முலை நாச்சியார், திருக்காமக் கோட்டமுடைய நம்பிராட்டியார், உலகுடைபெருமாள் 
நம்பிராட்டியார் என பல திருப்பெயர்கள் உண்டு. 

அம்மன் கருவறைமுன் அஷ்ட லட்சுமி மண்டபத்தின். எட்டு தூண்களிலும் அஷ்ட லட்சுமிகள் அருள்புரிகின்றனர். ஒரு தூணின் ஒருபுறம் விநாயகியின் (பெண் யானை) அபூர்வத் திருவுருவத்தையும் காணலாம்.

பௌர்ணமி தினத்தில் அண்ணாமலை யாரைத் தரிசித்து கிரிவலம் வர ஊழ்வினை நீங்கும் என்பது ஐதீகம். அதிலும் தீபத் திருநாளன்று மலை வலம் வருவது வாழ்வில் வளம் கூட்டும்.
கார்த்திகை திங்களில் ஈசனின் கட்டளைப்படி பூவுலகிற்கு வந்து அன்னை தவம் செய்து ஈசனின் அருள் பெற்று,. சாப நிவர்த்தி மட்டுமல்ல; ஈசனின் உடலில் சரி சமமாக இடப்பாகம் பெற்றாள். அன்னை 

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற அந்த நன்னாள் தான் கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது, 

“எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்” என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்தார். அதுவே தீபத் திருநாளாக அன்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. -



Sunday, November 22, 2015

பிருந்தாவன துவாதசி பூஜை



"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர
பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'

 கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதி அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதால் "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். .

நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகாவிஷ்ணு  பிருந்தாவன துவாதசி நாளில் "உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ' என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
துவாதசியன்று காலையில் துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும். துளசிச் செடிக்கு பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைத்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.
மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை  துளசி மாடத்தில்  வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும். 


துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள். துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.

துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வார். அதனால் துளசிக்கு "விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா' என்ற பெயர்களும் உண்டு.

மகாவிஷ்ணுவை மணாளனாக அடைவதற்காக பிருந்தை என்ற பெண் தவமிருந்தாள். அதன்படி பிருந்தை என்ற பெயரிலேயே பிறந்தாள்; ஜலந்திரன் என்ற அசுரனை மணந்தாள்.
கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில் ஜலந்திரனின் மனைவியாக இருந்து,  பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார்..
. செடியாய்ப் பிறந்த துளசியை  சாளக்கிராமத்தோடு (கிருஷ்ணனோடு) சேர்த்து பூஜிப்பது விஷேசம்... 
 ``கிருஷ்ணன் தன்னைவிட்டுப் பிரியாமல் நாரதர் `கூறிய யோசனைப்படி சத்தியபாமாவும், ``உத்தமரான உமக்கே கிருஷ்ணரை தானமாகத்தந்தோம்'' என்று கூறி நாரதருக்கே கிருஷ்ணரை தானமாகக் கொடுத்தாள். 

 நாரதர் கிருஷ்ணருக்குப் பதிலாக அவரது எடைக்கு எடை நவரத்தினங்களையும் தங்கத்தையும் தனக்குக் கொடுக்கும்படி கேட்டார். 

தராசில் எவ்வளவு செல்வங்களை வைத்தபோதும் கிருஷ்ணன் இருந்த தட்டுதான் இறங்கி இருந்தது. 

ருக்மிணிதேவி கிருஷ்ணார்ப்பணம் என்று துளசி தளத்தைக் கொண்டு வந்து இரண்டாவது தட்டில் வைத்தாள். தராசின் இரண்டு தட்டுக்களும் நேராயின. துளசியின் மகிமை அனைவருக்கும் புரிந்தது. 

வீட்டில் துளசி மாடம் வைத்து துளசியை பூஜிப்பது விசேஷம். 

கிருஷ்ணாவதாரத்தில் துளசிதான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் . துளசி பாற்கடலில் தோன்றியது.  துளசி தெய்வீக சக்தி கொண்டது.
துளசிக்கு ஸுலபா, ஸரசா,  அம்ருதா, ச்யாமா,  வைஷ்ணவி, கௌரி, பகுமஞ்சரி என்று வடமொழிகளில் பல பெயர்கள் உள்ளன. , 
 கரியமால் துளசி, கருந்துளசி,  கற்பூர துளசி, செந்துளசி, காட்டுத்துளசி, சிவதுளசி, நீலத்துளசி, பெருந்துளசி, நாய்த்துளசி. என ஒன்பது வகையான துளசிச் செடிகள்ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவை. 
ஆன்மிகத்திலும்   திருத்துழாய், துளபம், துளவம், சுகந்தா, பிருந்தா, வைஷ்ணவி, லட்சுமி, கவுரி, மாதவி, ஹரிப்ரியா, அம்ருதா, சுரபி எனப் போற்றப்படும் பெருமை உடையது துளசி..
துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவனும், மத்தியில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. 
துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள். எனவே துளசி இலையுடன் கூடிய நீர், கங்கை நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது.
 காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால் வணங்கி துளசியைப் பறிக்கவேண்டும். அப்போது,

"துளசி ஸ்யமருத ஜந்மாஸிஸதாத்வம் கேஸவப் பிரியே
கேஸவார்தாம் லு நாமித்வாம் வரதாபவ ஸோபதே'

என்ற சுலோகத்தை சொல்லிப் பறிக்க வேண்டும். 

நான்கு இலைகளுக்கு நடுவில் தளிரும் இருப்பதுபோல் (ஐந்து தளங்கள்) துளசியைக் கிள்ளிச் சேகரிக்க வேண்டும். 

பௌர்ணமி, அமாவாசை, துவாதசி திதிகளிலும்; ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி, நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது. குளிக்காமலும் துளசி இலையைப் பறிக்கக்கூடாது.

சளித்தொல்லை, விஷக்காய்ச்சலுக்கு நல்ல மருந்து துளசி. துளசிச் செடி வீட்டிலிருந்தால் விஷப்பூச்சிகள், பாம்பு, தேள் போன்றவை வராது. இடி இடிக்கும்போது, இடியின் தாக்கம்  வீட்டின்மீது விழாமல் தடுக்கும் சக்தி துளசிக்கு உண்டு. 
நல்ல கிருமிநாசினியாகச் செயல்படுவதோடல்லாமல், ஆன்மிக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் போற்றப் படுகிறது.

வயிறு உபாதை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு துளசி இலையை மென்று தின்றுவந்தால் குடல், வயிறு, 

வாய் தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். ஜீரணசக்தியையும் புத்துணர்ச்சி யையும் அளிக்கவல்லது துளசி.  பல நோய்களை குணமாக்கும் சக்திகொண்டது.

வீட்டின் தென்மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபடவேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி கோலமிட்டு, மாடத்தின் கீழ்ப்பகுதியில் சிறிய அகல்விளக்கு ஏற்றி வழிபட,  வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.

திருமால் ஆலயங்களில் துளசிவனம்.  துளசிமாடம்  இருக்கும்..
துளசி மாடத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறும்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மிகவும் போற்றக்கூடிய துளசி மாடம்  மற்ற துளசிமாடத்தைவிட மாறுபட்டது. ஆமையின் திருவுருவத்தின் மேல் அமைந்துள்ள துளசி மாடம்.  அருகில் வில்வமரமும் உள்ளது.
ஜலந்திரனை அழிக்க சிவபெருமானுக்கு உதவிய மகாவிஷ்ணு ஆமை அவதாரத்தில் இருக்க, அவருக்குப் பிடித்தமான பிருந்தையான துளசி அவர் முதுகில் மாடத்தில் உள்ளாள். 
 துளசிமாடத்திற்கருகில் நெய்விளக்கு ஏற்றி வலம் வந்தால் அவர்கள் மகாவிஷ்ணு, மகாலட்சுமியின் அம்சமாக அப்பொழுது மாறுவதாக ஐதீகம். துளசி மாடத்தை கன்னிப் பெண்கள் விளக்கேற்றி வழிபட, அவர்களுக்குப் பிடித்தமான வரன் அமையும்; 
 துளசிச் செடி துஷ்ட சக்திகளை வீட்டினுள் அனுமதிக்காது. துளசியைப் பூஜிப்பவர் வீட்டில் மகாலட்சுமி நித்யவாசம் செய்வாள்