Wednesday, August 13, 2014

சந்தோஷம் அருளும் மஹாசங்கடஹரசதுர்த்திவிரதம்



வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம் 
தப்பால் சார்வார் தமக்கு. 

 உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும், ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள்செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம்.

கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம்.

தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும்நீக்குபவரும், தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.

 திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்தவருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழ்ந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம்.

உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.

வேதங்களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும், எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.

நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்லமாகப் புகுகின்றோம்.


யாராலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், எல்லாவற்றையும் அறியச் செய்யும் இறைவனாகவும், ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியே! உன்னைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.

 -- கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய  காரிய சித்திமாலை துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். 

நினைத்த  காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் 
வெற்றி  உண்டாகும். 

எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் 
வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.

சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.

தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்த நன்னாளை   சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.

சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது, அழித்தல் என்று பொருள்.

வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக அவசியமானதாகின்றது.


ஒவ்வொரு மாதமும் வரும் 'பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும் சங்கடஹர சதுர்த்தி' நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். 

கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

 சங்கடஹரணம் என்றுஅழைக்கப் பெறும். சங்கடஹரவிரதம் விரதங்களுள் மிகச் சிறந்தது 

ஸ்ரீ கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் வானில் நிலவைப் பார்த்ததால், சியமந்தக மணி எனும் கல்லினால் பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது.

வளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனைப் பார்த்ததால், கெட்ட பெயர் ஏற்பட்டு, அதை நீக்க வேண்டி, ஸ்ரீ விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், பூஜையைச் செய்தார். 

விநாயகர் அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார். 

ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சிறப்புபானதாகின்றது.

சங்கடஹர கணபதியை வணங்கியவ செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன்  விநாயகரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றதால் -  சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. 

செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி 
மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.

சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களும் (கலௌ சண்ட விநாயக: - புராண வாக்கியம்) நீங்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்குமஹா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.


வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும். 

காட்டில் தருமபுத்திரர் சங்கடஹர விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். 

முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். 

பார்வதி விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். 

இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். 

அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் சங்கடஹர 
விரதத்தின் மகிமையால் தான்.

பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் யாரையும் தண்டிக்கும் எண்ணம் இல்லாமல், தவறுகளை மன்னிக்கும் குணம் உள்ளவர் என்பதால் பாச அங்குசம் ஏந்தாமல் இருக்கிறார். சடைமுடி, கங்கை, மூன்றுகண், இளம்பிறை ஆகியவற்றைக் கொண்டு சிவ அம்சத்துடன் விளங்கும் இவர், கற்பக மரம் போல கேட்டவரம் அருள்பவராக விளங்குகிறார். இவரைத் தரிசித்தால் பிறர் செய்த தவறுகளை மன்னிக்கும் குணம் வளரும்.
 பத்மாசனமாக காலை மடித்து யோகநிலையில் இருந்து, யோகபலன்களை வாரி வழங்குகிறார்
 யானை தன்னுடைய பெரிய காதுகளை விசிறிபோல 
அசைப்பதற்கு கஜதாளம் என்று பெயர். 

பிராணி வர்க்கங்களில் யானைக்கு கூர்மையாக கேட்கும் 
திறனும், ஞாபகசக்தியும் உண்டு. 

கேட்கிற சத்தத்தை சிதறாமல் உள்ளே அனுப்ப வேண்டும் 
என்பதற்காக இப்படி எப்போதும் அசைத்தபடி இருக்கிறது. 

சுவாமியிடம் வைக்கும் எந்த பிரார்த்தனையாக இருந்தாலும், கேட்பது என்னவோ அவருடைய காது தான். அந்த அடிப்படையில் வழிபாட்டை முழுமையாக உள்வாங்கிக் கொள்பவராக ஆனைமுகத்தான் விளங்குகிறார்.

காகமாக வந்து அகத்தியரின் கமண்டலத்தை தட்டி காவிரி நதியை ஓடச்செய்த பெருமைக்குரியவர். 

சிறுவனாக வந்து விபீஷணனை ஏமாற்றி ரங்கநாதரை காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்தவர். 


திருக்கோகர்ணத்தில் ராவணனிடம் சாதுர்யமாகப் பேசி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். 








தொடர்புடைய பதிவு..
சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி

20 comments:

  1. மகா சங்கடஹர சதுர்த்தி விரதம் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. எளிமையான நடையில், அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய, அழகிய படங்களுடன் கூடிய அழகிய பகிர்வு!

    ReplyDelete
  3. அனைவருடைய வாழ்விலும் கஷ்ட, நஷ்டங்களை நீக்கி இன்பவாழ்வு அருளட்டும் விநாயகர்.

    ReplyDelete
  4. படங்கள் எல்லாம் அழகு. விநாயகரின் அற்புதங்கள் , மகிமை விபரம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தகவல்களுடன் அருமையான பகிர்வு.

    ReplyDelete
  6. சங்குப் பிள்ளையார் மயக்கும் அழகு.

    ReplyDelete
  7. மஹா சங்கடஹர சதுர்த்தியின் மகிமை, அவ்விரதத்தின் சிறப்புக்களை அழகான விநாயகரின் படங்களுடன் சிறப்பான பகிர்வு. இவ்விரதத்தின் மகிமைகளை அறிந்துகொள்ள உதவிற்று. நன்றிகள்.

    ReplyDelete
  8. அருமையான தகவல்கள் - கண்ணைக் கவர்ந்த படங்கள்.....

    பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. மஹா சங்கடஹர சதுர்த்தி பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. என் மனைவி இன்றைக்கு தான் முதன்முதலாக அவருக்கு தெரிந்த வகையில் இந்த விரதம் மேற்கொண்டுள்ளார். அவ்விரதத்தை அனுஷ்டிக்கும் முறையைப் பற்றி தங்களுக்கு தெரிந்தால் எங்களுக்கு கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..
      சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகர் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.

      அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும்.
      அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

      விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும்.

      சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,
      "ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
      தன்னோ தந்தி ப்ரசோதயாத்" எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

      Delete
    2. உடனடியாக பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.
      இதில் அனைத்தையும் இங்கு செய்ய இயலும். ஒன்றைத் தவிர - வெள்ளை எருக்கு மற்றும் அருகம்புல். இங்கிருக்கும் விநாயகர் கோவிலில் கிடைக்குமா என்று தெரியவில்லை. மாலை சென்று பார்க்கிறோம்.

      மிக்க நன்றி அம்மா.

      Delete
  10. சந்தோஷம் அருளும் பதிவு
    தந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  11. எனக்கு அதிகப்பிரியமுள்ள என் தொந்திப்பிள்ளையாரப்பாவுக்கு
    என் வந்தனங்கள்.

    பிரஸாதம் ஏதும் கேட்கப்போவது இல்லை. கேட்டவரைக் கொடுத்தவரைப் போதும் ..... போதும்.

    >>>>>

    ReplyDelete
  12. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்......
    பாடலுடன் ஆரம்பித்துள்ள பதிவு
    மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

    >>>>>

    ReplyDelete
  13. அசையும் படங்கள் நம்மையும்
    அசைய வைப்பதாக உள்ளன.

    கஜதாள விளக்கம் அழகோ அழகு !

    படித்ததும் என் காதுகளும் தனியே ஆடத்துவங்கி விட்டன ! ;)

    >>>>>

    ReplyDelete
  14. பிள்ளையாரும் எலியாரும் ஸீ...ஸா
    விளையாடும் கீழிருந்து நாலாவது
    படம் புதுமையாக உள்ளது.

    அதுவும் முரட்டுப்பிள்ளையாரையே
    மேலே தூக்கி விட்டாரே அந்த
    மிகச்சிறிய எலியார் !

    எ[லி]ளியோரும் வலியோரை
    வெல்லமுடியும் என்ற கருத்தினை
    வெல்லமாகச் சொல்வதாக உள்ளது.

    வாயில் அடக்கிடும் குட்டியூண்டு
    அச்சு வெல்லம் போல இனிமை.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்..

      இனிமையான கருத்துரைகளால்
      பதிவைப் பொலிவுறச் செய்தமைக்கு
      நிறைவான நன்றிகள்.!

      Delete
  15. மற்றபடி அனைத்துப்படங்களும், விளக்கங்களும் வழக்கம்போல் மிகவும் அழகாக [நாளுக்கேற்றபடி] மிகப்பொருத்தமாக அமைந்துள்ளன.

    >>>>>

    ReplyDelete
  16. அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

    ;) 1367 ;)

    oooOooo

    ReplyDelete
  17. wonderfull ganesa images thanks sister

    ReplyDelete