Tuesday, June 28, 2011

குருவாயூரில் குண்டுமணி பிரார்த்தனை...



குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் மஞ்சாடி விதைகளையும் குண்டுமணியையும் நிரப்பி வைத்திருப்பார்கள். 

இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். 

பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும்.  

மஞ்சாடி என்ற மரத்தில் இருந்து வரும் விதை என்பதால் இதை கேரளாவில் "மஞ்சாடிக்குரு" என்று சொல்வார்கள்.

சிவப்பு, கருப்பு வண்ணங்களுடன், சிறிய உருண்டை வடிவில் குண்டுமணி இருக்கும். 

பொதுவாக குழந்தைகள் விளையாடுவதற்கு மட்டுமே இதனை பயன்படுத்தி பார்த்திருப்போம்.

கேரளா மாநிலம் குருவாயூரில், குழந்தை வரத்திற்கான பூஜையில் குண்டுமணி   தனி முக்கியத்துவம்  பெறுகிறது ...

பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதியர், குருவாயூர் கோயிலில் பூஜை , குண்டுமணி அர்ச்சனைக்கு முக்கிய இடம் உண்டு. 

முன்னதாக பாத்திரத் தில் குண்டுமணிகளை நிரப்பி வைத்து இரு கைகளும் சேர்த்து முடிந்தளவு குண்டுமணிகளை அள்ளியபின், குழந்தை வரம் குறித்த கோரிக்கையை மனம் உருகி வேண்டிய பின்னர் அதே பாத்திரத்தில் விட்டு விடுவர். 

கோயில் மட்டுமின்றி கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) நாட்களில், சிலர் வீடுகளிலும் இதுபோன்ற பூஜைகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் சில பகுதிகளில், இந்த அர்ச்சனை முறை காணப்படுகிறது.

கோவை அஷ்டாம்ச அஞ்நேயர் கோவிலிலும்,தன்வந்திரி கோவிலிலும் உருளியில் இந்த சிவந்த மஞ்சாடி மணிகளையும், மேலே கறுப்பு கீழே சிவப்பு உள்ளே பருப்பு என்று விடுகதை போட்ட குண்டுமணிக்ளையும் காணலாம்.

பொன் அளவையில் குண்டுமணியை எடை கணக்கிடப் பயன்படுத்துவார்கள்...

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது.

 "புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி 
மூக்கிற் கரியா ருடைத்து' 

என்ற குறள் குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது கருத்து. 

குருவாயூரில் திவ்யமாக திகழும் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணனின் வடிவம் மனம் கவரும் பாணியில் நான்கு கைகளுடன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஒரு கையிலும், சுதர்சன சக்கரம் என்ற சக்கரத்தை இன்னொரு கையிலும், மூன்றாவது கையில் கௌமோதகி என்றறியப்படும் கதையையும் மேலும் நான்காவது கரங்களில் தாமரை மலரையும் வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் காட்சி தருகிறார்

கழுத்தில் புனிதமான துளசி மாலை அலங்கரிக்க, இந்த விக்ரஹம் மகா விஷ்ணுவின் கம்பீரமான அவதாரத்தை குறிப்பதாகும், 

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அவர் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு இவ்வாறே தோற்றமளித்தார்; இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் போற்றப்படுகிறது. 

கண்ணன், உண்ணிக் கண்ணன், (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்றழைத்து மக்கள் பரவசம் அடைகின்றனர்.


ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம்.  குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும், அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் கொள்ளை ஆசை கொண்ட வயதான பெண்மணியின். வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. 

குண்டுமணிகள் கீழே விழுபவற்றைச் சேகரித்து, நன்கு அலம்பி, துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள்  சிரமமாக இருப்பினும் "கண்ணனைக்காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று ஒரு மண்டலம் பயணம் செய்து அந்த மாதத்தின் முதல் நாளில் குருவாயூர்  கோவிலையும் அடைந்தாள். 

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன், அவன் பக்தியை வெளிப்படுத்த, கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். 

சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம், கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. 

கோவில்பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர்.


அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து " நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்திவிட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்குவேண்டும்" என்று அசரீரி கேட்டது. 

கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை, அனைவரும் பொறுக்கி எடுத்து அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். 

அவள் ஆசையுடன்  சமர்ப்பித்ததும், யானையின் மதம் அடங்கியது. 

அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது .


பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. 

உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

ஒருசமயம், ஆதிசங்கரர் ஆகாயமார்க்கமாக வானில் பறந்து சென்ற போது, திரிலோக சஞ்சாரியான நாரதர் எங்கோ வேகமாகச் செல்வதைப் பார்த்தார்.
படிமம்:Vilakku.jpg
அவசரமாக எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்களே?'' என்று கேட்டார். 

""இன்று ஏகாதசி. குருவாயூரப்பனை தரிசிக்கசெல்கிறேன். நீங்களும் வாருங்களேன்,'' என்று சங்கரரையும் அழைத்தார் நாரதர். 

""விக்ரக ஆராதனை செய்வதும், நாமஜபமாக இறைவனின் பெயரை உச்சரிப்பதும் பாமரருக்குத் தான் தேவை. ஆத்மஞானம் பெற்றவர்களுக்கு தேவையல்ல,'' என்ற கருத்துடைய சங்கரர் அவருடன் செல்ல மறுத்துவிட்டு தன் ஆகாயப் பயணத்தைத் தொடர்ந்தார்.
Hotels in Guruvayur, Guruvayur Hotels, Budget Hotels in Guruvayur, Guruvayur Budget Hotels

குருவாயூர் கோயிலைக் கடந்து செல்லும்போது, வானில் இருந்து கோயிலின் வடக்குவாசலில் போய் விழுந்தார். 

குருவாயூரப்பனின் லீலையை எண்ணி வியந்து, தன்னுடைய கருத்து தவறானது என்பதை உணர்ந்து வருந்தி பெருமாளிடம் தன்னை மன்னிக்கும்படி மன்றாடியவர் முன் தோன்றிய குருவாயூரப்பன், "ஞானிக்கும் பக்தி அவசியம்' என்று எடுத்துக்கூறினார். 

நீலமணிவண்ணனான கண்ணனின் பெருமைகளை எண்ணி ஆதிசங்கரர் அவ்விடத்தில் 41நாட்கள் வரை தியானத்தில் ஆழ்ந்து குருவாயூரப்பனை வழிபாடு செய்தார். 

இன்றும் குருவாயூரப்பன் வீதிவுலா வரும்போது ஆதிசங்கரர் வழிபட்ட இடத்தில் மேளதாளங்கள் இசைக்காமல் அமைதியாகக் கடந்து செல்வர்.

அப்போது குருவாயூரப்பனிடம் ஆதிசங்கரர் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்.

குருவாயூர் கோவிலில் வடக்கு வாசலில் ஆதிசங்கார் பற்றிய குறிப்பும் காணக்கிடைக்கிறது.

ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தில், காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனம்  ஸ்ரீ குருவாயூரப்பன் முதல் நாள் இரவு சார்த்தப்பட்ட சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்களுடன் குழந்தைக் கண்ணனாகக் காட்சி தந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பான்.

ஓரிரு நிமிடங்களில் அவனது அலங்காரம் களையப்பட்டு, தைலாபிஷேகம் செய்தவுடன் வாகை மரத்தின் பட்டையை இடித்துத் தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகை சார்த்து என்கிறார்கள்.

அதன்பின் தங்கக் குடத்திலிருக்கும் புனித நீரால் திருமுழுக்காட்டி அலங்காரம் செய்யப்படுகிறது.

திருமுடியில் மயில்பீலி அணிந்து, கையில் வெண்ணெய் ஏந்தி,  புல்லாங்குழலுடன் பாலகோபாலனாக ஸ்ரீ குருவாயூரப்பன் பக்தர்களுக் குத் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறான்.

இந்த அபிஷேகத் தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என பக்தர்கள் நம்புகின்றனர்.

 ஒரு காலத்தில், தாய்- தந்தை யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த காஷு  சிறுவன் தொடர்ந்தாற்போல் மூன்று தினங்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டதாம்.

பசியின் கொடுமையைத் தாங்கவியலாத அவன் அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்தான். அப்போது நாரத முனிவர் அவன்முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த அட்சய பாத்திரத்திலிருந்து உணவு கிட்டும் என்று கூறினாராம்.

அவனும் அதிலிருந்து  தேவையானபோதெல் லாம் உணவை வரவழைத்துச் சாப்பிட்டு பசியாறிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் காஷு மீண்டும் தான் தண்ணீரில் மூழ்குவதுபோல நடித்து, நாரத முனிவரை வரவழைத்து வீடு, செல்வம் போன்றவற்றை அடையலாம் என்று நினைத்து நதியில் சென்று அவன் மூழ்கியபோது நாரத முனிவரும் வரவில்லை; அட்சய பாத்திரத்தையும் காணவில்லை.

பேராசையால் தனக்கு நேர்ந்த துயரத்தை எண்ணிய காஷு, இறைவனின் புனிதப் பெயர்களை உச்சரித்து அவன் தியானத்திலேயே தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.

அவனது நிலையைக் கண்டு வருந்திய லட்சுமிதேவி, உடனடியாக அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்ட, அவரும் அதற்கு இணங்கினார்.

""கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது நான் குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனா கக் காட்சி தருவேன். ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் முடிந்தவுடன் என்னை வாகைத் தூளினால் தேய்த்து தூய்மை செய்வார்கள். அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். இந்த வாகை சார்த்து நல்லெண்ணெய், வாகைப் பொடி அபிஷேகத் தீர்த்தம் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர் களின் தோல் நோய்களும் தீரும்'' என்று கூறி  காஷுவையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.

இவ்வாறுதான் குருவாயூர் திருத்தலத்தில் குருவாயூரப்பனுக்கு "வாகை சார்த்து' வழக்கம் ஏற்பட்டதாம்.




19 comments:

  1. குண்டுமணியின் மகத்துவம் அறிந்திருந்தேன் ஆனால் இன்றுதான் முழுமையாக அறிந்தேன்.

    என் வசம் எண்ணி இருபதே இருபது குண்டுமணி இருக்கிறது.

    ReplyDelete
  2. குண்டுமணி என்றவுடன் அந்தப் பெயரில் சினிமா நடிகரின் ஞாபகம் வந்தது. இதன் சரியான பெயர் குண்டுமணியா அல்லது குந்துமணியா? நகைக் கடைகளில் குந்துமணி என்று ஒரு எடை அளவு உண்டு.

    ReplyDelete
  3. அருமையான தரிசனம் , நன்றி..

    ReplyDelete
  4. ஹே குருவாயூரப்பா! இன்று எங்களுக்கு எவ்ளோ தகவல்கள்! மிக்க சந்தோஷம்.

    ReplyDelete
  5. குந்துமணியைப்பார்த்துள்ளேன். விளையாடியுள்ளேன். அது ஒரு மரத்தினிலிருந்து காய்க்கும் விதைகள் என்பதை இன்று தான் உணர்ந்தேன். நல்ல அருமையான தகவல்கள். அதன் கருப்பு சிவப்பு நிறமும் அருமை.

    பாத்திரத்தில் நிறைய குந்துமணிகளுடன், நடுவில் பில்லாங்குழல் ஊதும் பசு பால கிருஷ்ணன், மேலே இரண்டு மயில்களுடன், விக்ரஹமாக காட்டியிருப்பது என் மனதை கொள்ளை கொள்கிறது.

    நன்றி.

    ReplyDelete
  6. திருக்குறளுக்கான விளக்கம் மிகவும் அருமை.

    அந்த ஏழை வயதிகப்பாட்டியின் கதை மூலம்

    //பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.//

    என்று சொல்லப்பட்ட கருத்து
    கண்களில் நீர் தளும்ப வைத்தது.

    நன்றி.

    ReplyDelete
  7. //""விக்ரக ஆராதனை செய்வதும், நாமஜபமாக இறைவனின் பெயரை உச்சரிப்பதும் பாமரருக்குத் தான் தேவை. ஆத்மஞானம் பெற்றவர்களுக்கு தேவையல்ல,''// என்று கருதிய
    ஆதி சங்கரருக்கு குருவாயூரப்பன் காட்சி கொடுத்த வரலாறு, இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை.

    புதிய தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. அதிகாலை நடைபெறும் விஸ்வரூப தரிஸனமும், வாகை சாத்துவது என்றால் என்ன என்ற முழு விபரங்களும், அதற்கான புராணக்கதையும், அடடா....
    மெய்சிலிரிக்க வைக்கிறது என்னை.

    ReplyDelete
  9. // வாகைப் பொடி அபிஷேகத் தீர்த்தம் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர் களின் தோல் நோய்களும் தீரும்'' //

    நீங்கட்டும். மகிழ்ச்சியே.

    ஸ்ரீ குருவாயூரப்பனை பலமுறை சென்று தரிஸிக்கும் பாக்யம் பெற்றுள்ளேன்.

    தகவல் களஞ்சியமாகிய தங்களைத் தான் நேரில் ஒருமுறையாவது காணவேண்டும் என்ற என் ஆவல், விரைவில் பூர்த்தியாக அந்த ஸ்ரீ குருவாயூரப்பன் அருள் புரிவார் என்று நம்புகிறேன்.

    படங்கள், விளக்கங்கள், புராணக்கதைகள், போன்ற அனைத்தையும் வெகு அருமையாகத்தந்துள்ள
    தகவல் களஞ்சியத்திற்கு தலைவணங்கி நன்றி கூறிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  10. குருவாயூரப்பன் கோவில் போய் வந்திருக்கிறேன். குந்து மணிக் கதை புதிது.

    ReplyDelete
  11. ஸ்ரீ குருவாயூரப்பன் திருவுருவப்படமும், யானைகளின் அழகான அணிவகுப்பும் கண் கொள்ளாக்காட்சியாக உள்ளன.

    குருவாயூர் கோவிலிலிருந்து சுமார் 4-5 கிலோ மீட்டருக்குள் “ஆனைகட்டா” என்ற ஓர் இடம் உள்ளது. நீங்கள் போய் வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    குருவாயூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது. நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளைப் பராமரித்து வருகின்றனர்.

    நாங்கள் எல்லோரும் (பேரன்+பேத்தியுடன்) சென்று போட்டோ வீடியோ எடுத்து வந்தோம். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில், காடு போன்ற சூழ்நிலையில், 100 க்கும் மேற்பட்ட யானைகளைக் காண்பது மிகவும் அரிதல்லவா!

    அதைப்பற்றி கூட தாங்கள் ஒரு தனிப்பதிவு வெளியிடலாம்.

    ReplyDelete
  12. //பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்//WELL SAID .நிறைய விஷயங்கள் ,தகவல்கள் எல்லாமே தெரிந்து கொண்டேன் .

    ReplyDelete
  13. குந்துமணியின் தகவல்கள் அருமை
    படங்களும் பதிவும் பிரமாதம்
    தொடர வாழ்துக்கள்

    ReplyDelete
  14. அருமையான பதிவு.
    புதிய செய்திகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. குருவாயூரப்பனின் தரிசனம் குறைவின்றி கிடைத்தது.

    ReplyDelete
  16. நாங்களும் குருவாயூரில் என் மகனின்
    தோல் நோய் தீர துலாபாரம் பிரார்த்
    தனை செய்தோம். அப்போ இந்த தகவல்
    கள் சரிவர தெரிந்திருக்கலை. தோல்நோய்க்கு த்லாபாரம்னா சேனை எடைக்குஎடை கொடுக்கச்சொன்னாங்க.

    ReplyDelete
  17. இப்போது காணக்கிடைக்காத மரம்.

    சிறுவயதில் எங்கள் வீட்டிற்கு முன் இருந்த வயோதிபர் வீட்டில் நாங்கள் தாத்தா என அழைப்போம். குண்டுமணி மரங்கள் நிறைய இருந்தன பிடுங்கி விளையாடி இருக்கிறோம்.

    ReplyDelete
  18. My tamil is not too good, I can read well but not write. please forgive me. I have a lot of this kundhumani in my house. I also found out that it is one of the 3 most poisonous seeds on earth, So it needs to be handled with care. here are some links. I am trying to keep persons using it to be aware of it.

    http://en.wikipedia.org/wiki/Abrus_precatorius

    ReplyDelete