Thursday, March 31, 2011

சிட்னி படகுப் போட்டி





இயற்கை அழகை அற்புதமாக போற்றிப் பாதுகாப்பதில் சிறந்து விளங்கும் ஆஸ்திரேலிய தீவுக்கண்டத்தில் ஒலிம்பிக் படகுப் போட்டிகள்பெரிய அளவில் நடை பெற்று வருவது கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது.
பல இனகலாச்சாரங்களின் அழகான தொகுப்பான ஆஸ்திரேலியநாட்டில் சீன்ர்கள் அதிகமாக காண்ப்படுகிறார்கள்
.
சிட்னியில் சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வருடா வருடம் அமர்க்களமாக நடைபெறும்.  

சீனத் திரைப்பட விழாக்கள், விதவிதமான சீன உணவுக் கண்காட்சிகள், சீனப்பெருஞ்சுவர் கட்டட மாதிரிக் கண்காட்சி, சீனப்பூங்கா உலா, சிட்னியில் உள்ள சீன மூதாதையர் பற்றிய விளக்க விழா என்று விதவிதமான விழாக்கள் காணக்கிடைத்தன.
அவற்றுள் டிராகன் படகுப் போட்டியைக் காண சந்தர்ப்பம் அமைந்தது.

காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை நூற்றுக்கும் அதிகமான படகுகள் கலந்து கொள்ள, நிகழ்ந்த இந்த டிராகன் படகுப் போட்டி, கண்ணுக்கும்,கருத்துக்கும் விருந்தாக இனித்தது. 

சீன வருடங்கள் விலங்குகளின் பெயராலேயே அழைக்கப்படுவதால் அந்தந்த விலங்குகளின் உருவத்தை படகுகளில் அமைக்கும் காட்சி அந்த விலங்குகளே கடலில் சீறி வருவதைப் போல் தோற்றம் காட்டுகின்றன.
அதற்கேற்றாற்போல விஷேட ஜோடனைகளுடன் சிட்னி டார்லிங் ஹாபர் என்ற அழகுமிகு துறை அலங்கரிக்கப்பட்டுக் கவர்ச்சிகரமாக இருந்தது. இது சீனப்பண்டிகை குறித்த நிகழ்வு என்றாலும் வேடிக்கை பார்த்ததிலும் போட்டிகளில் பங்கெடுத்ததிலும் அதிகம் ஆக்கிரமித்தது வெள்ளையர்களே. 
முன்பதிவு செய்யாமல் எல்லாம் படகுப்பந்தயத்தில் கலந்து கொள்ள முடியாதாம். இதற்காக முறைப்படி படகுச் சங்கத்தில் முறையாகப் பதிவு செய்து ஓவ்வொரு வாரமும் இரு தினங்கள் பயிற்சியாக ஆண்டு முழுவதும் கற்றே களம் இறக்குவார்களாம். 
1946 ஆம் ஆண்டிலிருந்து பெண்களும் இந்த போட்டியில் பங்கேற்கிறார்களாம்.
Adrienne Cahalan, என்னும் வீராங்கனை 2005 ஆம் ஆண்டுWild Oats. என்னும் பெயர் கொண்ட படகில் வெற்றி பெற்றுப் பரிசு வென்றாராம்.

இதுவரை ஆயிரம் பெண்கள் இந்த கடினமான போட்டியில் பங்கேற்று இருக்கிறார்களாம்

Wednesday, March 30, 2011

பெயர் சூட்டும் வைபவம்.





பெயர் காரணம் தொடர் பதிவாகவே சுற்றிச் சுற்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எங்கள் இல்லத்தில் பெயர் சூட்டும் விழா வைபவமாகவே சிறப்பாக நடைபெறும்.

தாய்மாமா மடியில் வைத்து காதில் பெயர் சொல்லும் வரை பிரம்ம ரகசியமாகவே  காக்கப்படும்..!.

அனைத்து உடன்பிறந்தவர்களையும் அழைத்து குடும்பவிழா மகிழ்ச்சியாகத
தொடங்கும். சர்க்கரைப் பொங்கல் வாழை இலையில் தங்கக்காசுடன் பூஜை அறையில் கற்பூர தீப ஆராதனையுடன் படைக்கப்படும்.

தங்கக்காசில் பொங்கலைத் தொட்டு வாயில் வைத்து குழந்தைக்கு இனிப்பான உணவை அறிமுகப்படுத்துவார்.

புத்தாடை அணிந்த குழந்தையின் வலதுகாதில் மென்மையாக மூன்று முறை  சொல்லும் போது தான் அனைவரும் தெரிந்து கொள்வோம்.
தங்கக்காசில் பொங்கலைத் தொட்டு குழந்தையின் வாயில் வைத்து ,
வரிசையாக அனைவரும் குழந்தையின் இரண்டு காதிலும் மூன்று மூன்று முறை பெயர் சொல்லி மகிழ்வோம்.
குருவாயூர் கோவிலில் குழ்ந்தைகளுக்கு அன்னப்பிராசனம் நடக்கும் எழில் கோலம் கண்நிறைந்த கோலம் நிறைய முறை கண்டு களித்திருக்கிறோம்.

எங்கள் மாமனார், மாமியாருக்கு ஒன்பது குழந்தைகள். டஜன் கணக்கான பேரன் பேத்திகள்.
அவர்கள் யாரையும் பெயரைச் சுருக்கியோ, செல்லப் பேரிட்டோ அழைப்பது கிடையாது. முழுப் பெயரையும் அருமையாகச் சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.
 மாமனாரின் கோபம் உறவினர்களிடையே வெகுபிரசித்தம்.அவர் குழந்தைகளை
அருகில் அமர்ந்து கொஞ்சுவாராம்.எடுத்து கையில் வைத்துக் கொண்டதில்லையாம்.
என் மகனை முதலில் கைகளில் வாங்கிக் கொண்டதை வியக்காதவர்கள் குறைவு.  முதல் பேரனல்லவா!..
மகன் பிறப்பது ஆனந்தம். மகனுக்கு மகன் பிறப்பது பேரானந்தம் என்று கூறினாராம்.
பேரனை எங்கும் அழைத்துச் செல்வார். தோட்டத்திற்காகட்டும், உல்லாசப் பயணத்திற்காகட்டும்.வீட்டின் ஒரு பகுதியிலேயே அலுவலகம் இருந்ததால், சாப்பிடவோ, படிக்கவோ கூப்பிட்டால் மறுத்துவிட்டு, பேரனின் புகலிடம் தாத்தாவின் மேஜைக்கடியில் தஞ்சமடைந்து விடுவார்கள்.
தாத்தாவிடம் கதை கேட்பதில் கொள்ளைப் பிரியம் அவர்களுக்கு. என்னிடம் வர மறுத்துவிடுவார்கள்.


எனக்கு எப்படி பெயர் வைத்தீர்கள் என்று தாயாரிடம் கேட்டேன்.
விநாயகர் சதுர்த்தி அன்று பிறந்தேனாம். ஞானானந்த கிரிமடத்தில் பூஜை செய்து வந்த அம்மாவின் பெரியப்பா விநாயக சதுர்த்தி பூஜை செய்துவிட்டு பிரசாதத்துடன் வீட்டுக்கு வந்தாராம்.



பஞ்சாங்கம் பார்த்து, நட்சத்திரமும் ராசியும் அறிவித்துவிட்டு, அவரது இஷ்ட தெய்வமான விநாயரின் தாயார் பெயரான ராஜராஜேஸ்வரி என்று வைத்தாராம்.

திருவரங்கத்தில் சங்கு சக்கர முத்திரை வைத்து ரங்கநாயகி என்று அழைத்தார்கள்.
ஆறுமுகமாக இருந்த அப்பாவழித் தாத்தா அச்சுத ராமானுஜ தாசர் என்றும், அவரது தம்பி அருணாசலமாக இருந்தவர் அழகிய மணவாள ராமானுஜ தாசர் என்றும் தாஸ்யப் பெயர் ஏற்றார்கள்.

எங்கள் பள்ளியில் உறவினர்பெண் பெயரும் ராஜேஸ்வரி. இருவரும் முதல் இரண்டு ரேங்க் மாறி மாறி எடுப்போம். எங்கள் ஆசிரியர் ராஜேஸ்வரி என்று பெயர் வைத்தால் நன்றாகப் படிப்பார்கள் என்று தன் பெண்ணுக்கும் ராஜேஸ்வரி என்று பெயர் சூட்டியதாக வகுப்பில் கைதட்டலுக்கு நடுவே அறிவித்தார்.

கல்லூரியில் உளவியல் பாடம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நூலகத்தில் தேடித் தேடி உளவியல் பத்தகங்களாகப் படித்து நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருப்பேன்.

ஆசிரியர் கேள்விகேட்டவுடனே முன் எச்சரிக்கையாகச் சொல்லிவிடுவார் ராஜேஸ்வரியைத் தவிர வேறு யாருக்கவது பதில் தெரியுமா? என்று.
யாரும் வாயைத்திறக்க தயாராக இருக்க மாட்டார்கள்.தெரிந்தால் தானே?
கடைசியில் நான்தான் பதில் கூறும்படி இருக்கும்.

என் முதல் வகுப்பு ஆசிரியை மேரி செல்வம் அவர்கள் என் எஸ்.எஸ்.எல்.சி . புத்தகத்தை ராசியானது என வாங்கிப் படித்து தேர்வு எழுதி பாஸ் செய்தார்கள். அவர் எட்டாம் வகுப்புத் தேறி ஆசிரியை ஆனவராம்.

என் கணவரின் மூத்த ச்கோதரி பெயரும் ராஜராஜேஸ்வரி. அவரது மூன்று தம்பிகளுள் இரண்டு தம்பியரின் மனைவியர் பெயரும் ராஜேஸ்வரிதான்.
அப்போது எங்கள் வீட்டில் வேலை செய்த பெண்ணின் பெயரும் ராஜேஸ்வரி.
எங்களை அவரவர் கணவரின் பெயருடன் சேர்த்து அடையாளப் படுத்துவார்கள்..
அனைவரும் அண்ணி என்று என்னை அழைப்பதைப் பார்த்து என் மகன்களும் சிறுவயதில் அண்ணி என்று அழைத்தர்கள்.

Tuesday, March 29, 2011

புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி.



சிறுவாணித் தண்ணீராய் சுவைக்கும் கோயமுத்தூருக்கு புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லைப் பதித்தது போல் கோவை வடவள்ளி அருகில் பாலாஜி நகரில் அருள் கோலம் கொண்டு எழிலாய் அமைந்திருக்கிறது புவவேஸ்வரி அம்மன் ஆலயம்.

ஆன்மாக்களை லயப்படுத்தும் ஆலயத்தில் முன்புறம் கோசாலையில் அழகாக பசுவும் கன்றுமாக லட்சுமி கடாட்சத்துடன் இனிய தோற்றம் அளிக்கிறது.

ஆனைமுகன், முதல் பிள்ளையாய் லட்சணமாய் வரவேற்கிறார்.
வில்வமரத்தடியில் விஷேஷமாய் திருநீலக்கண்டரான சிவனைத்தரிசிக்கிறோம்.

புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி, பஞ்சாட்சரி, ஆனந்த ரூபிணி, பரமேஸ்வரி தாயின் கருணைப் புன்னகையுடன் அரசாட்சி செய்கிறாள்.

தன்வந்திரி பகவான் அமிர்தகலச ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார்.

ஆஞ்சநேய வீரன், அனுமந்த சூரன் கம்பீரமான காட்சிதருகிறார்.

தாமரை வடிவ பெரியபீடத்தில் அனுக்கிரஹ நவக்கிரகங்கள் ரட்சிக்கின்றார்கள்.

சன்னதிக்குப் பின்புறம் பெரிய அரசமரம், அடியில் விநாயகரும் நாகப்பிரதிஷ்டையும்.

சிற்ப்புறு மணியாய், குறைவிலாதருளும் குணமுடன் வாழ மனம்வைதருளும்
மங்களம் தங்கும் செவ்வாய் பகவான்,சிவந்த ஆடையுடனும், சிவப்பு மலர்களாலும் அலங்கரிக்கப் பட்டு அருளுகிறார்.

அபூர்வமான நாகதுர்க்கை, அஷ்ட்ட நாகங்களை, காதுகளிலும், கைகளிலும். இடுப்பில் மேகலையாகவும், குடையாகவும் ,கழுத்தில் மாலையாகவும், பாதங்களிலும் கொண்டு அருளுகிறாள்.

எதிரில் மிகப்பெரிய பாம்புப்புற்று கவனத்தை ஈர்க்கிறது.அதற்குள் நாகங்கள் இன்றும் வசித்துக் கொண்டிருப்பதாகவும்,அம்மனின் மேல் இரவுநேரங்களில் ஊர்ந்து வருகிறது என்றும், புற்று வளர்ந்துகொண்டு வருவதாகவும் கலியுக  அற்புதம் என்றும் கூறுகிறார்கள்.

வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.

தேனாபிஷேகம் பெரிய அளவில் நடைபெறுகிறது. பெயர் நட்சத்திரம் மற்றும் வேண்டுதலையும் கூறி அர்ச்சனை செய்கிறார்கள். தேன் அங்கேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. நாமே வாங்கியும் செல்லலாம். பெரிய வாளி,வாளியாக தேனாபிஷேகம் கண்கொள்ளாக்காட்சி.

 அபிஷேகத்தேன் சேகரிக்கப்பட்டு, சிறுசிறு பாட்டில்களில் நிரப்பி அர்ச்சனை செய்தவர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள். திருமணத்தடை, பத்திரப் பேறு, நாகதோஷம் என்று கோரிக்கையை முதலிலேயே அனுமதிச்சீட்டில் பதிந்து அதற்கேற்ப தேன் தருகிறார்கள்.

பஞ்சமி திதி வரும் நாட்கள், திதியின் ஆரம்ப,முடிவு நேரங்கள் அச்சிட்ட அட்டை வழ்ங்குகிறார்கள்.

ஐந்து பஞ்சமி தொடர்ந்து வந்து கலந்து கொண்டு,பிரசாதம் வாங்கி சாப்பிடச்சொல்கிறார்கள். அப்படி வரமுடியாதவர்கள் பணம் கட்டி, விலாசம் தந்தால் அனுப்புகிறார்களாம்.

திருமணம் நாக தோஷத்தால் நடைபெறுவது பாதிக்கப்ப்ட்டவர்கள், பிரசாத தேனை காலை குளித்தபின் சிலதுளிகள் சாப்பிடவேண்டுமாம்.

புத்திரபாக்கியத்திற்கு தம்பதியர் இருவருமாக சாப்பிடச் சொல்கிறார்கள்.
பாலாபிஷேகமும் உண்டு.அபிஷேகத்திற்குப் பிறகு பூக்களால் அலங்காரம் சிறப்பாகச் செய்கிறார்கள்.

வசந்த மண்டபத்தில் மூலிகைகள்,பூத்துச் சொறியும் பூக்களால் ஆன நந்தவனத்தின் ந்டுவே தாமரைத் தடாகத்தில் அழகான தாமரைகள் சூரியனைக் கண்டு மகிழ்ந்து சிரிக்கின்றன.

 ந்டுவே வெண்தாமரையில், கையில் வீணையுடன் அறிவுததும்பும் முகக் களையுடன் கல்விக்கரசி கலைமகள் அரசோட்சிக் கொண்டிருக்கும் இனிய திருக்கோலம்.

வட்ட வடிவ குளத்தின் படிக்கட்டின் இருபுறமும் செழுமையான தோகையுடன் இருமயிலகளின் சிற்பம் மயிலாசனம் கண்கொள்ளாக் காட்சி.

கல்விப்பெருஞ் செல்வப் பேற்றை மோனத்தவத்துடன் அமர்ந்து ஏகாந்தமாய் வழிபடுகிறோம்.

திருமண்த்திற்காக ஜாதகப் பரிவர்த்தனைக்காக் நட்சத்திரவாரியாக ஆண், பெண் ஜாதகங்கள் வைத்திருக்கிறார்கள்.

கோவிலுக்கு எதிரே தனியான கோபுரத்துடன் கூத்தனூர் போல சரஸ்வதி ஆலயம் தனியாக எழுப்பி கல்விச் செல்வத்தின் சிறப்பை பறைசாற்றுகிறார்கள்.
 photos
 சத்சங்கம் அமைத்து திருப்புகழ், மூகபஞ்சதி,சவுந்தர்ய லஹரி பாடல்களும், இசையும், வாத்தியங்களும், இனிது ஒலிக்க பங்கயாசன்த்தில் கூடும் பசும் பொன் கொடிக்கு ,சகலகலாவல்லிக்கு வாழ்த்துரைக்கிறார்கள்.           

Monday, March 28, 2011

ஆஸ்திரேலியாவில் ஹோலி






ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைக்கப்பட்டது. 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வருடந்தோறும் செப்டம்பர் 1 ம் தேதியினை மரக்கன்று நடும் தின 100ஆம் ஆண்டு விழா நியூ சௌத்வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. 

இதனையொட்டி இப்பல்கலை.யில் இந்திய மாணவர்கள் உட்பட பல்வேறு நாட்டு மாணவர்களும் படிக்கின்றனர். இப்பல்கலை.யின் நூலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது.

மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான தூதர ஜெனரல் அமித்தாஸ்குப்தா என்பவர் வழங்கிய ஏராளமான புத்தகங்களும் இந்நூலகத்திற்கு வழங்கப்பட்டன. சிலை திறப்பு விழாவில் பல்கலை. துணைவேந்தர் பிரெட் ஹில்மர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.


வானவில் நிறங்களை மண்ணில் தெளிக்கும் ஹோலி பண்டிகை ஆஸ்திரேலிய நியூசவுத்வேல்ஸ்பாலசங்கர கேந்திராவில்,விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் சிற்ப்பாகக் கொண்டாடப்ப்ட்டது. 
சம்ஸ்கிருத மொழி வகுப்பும் நடத்தப்பட்டது.
இவர் தன் மனைவியுடன் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தார்.
பாலசங்கர கேந்திர குழந்தைகளுக்கு ஹோலி கொண்டாடப்படுவதின் நோக்கத்தையும், பிரகலாதன் சரிதததையும், ஹிரண்யகசிபு கதையும் சுவைபட எடுத்துரைத்தவர் -சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விஷ்வ இந்து பரிஷத் தலைவர்.
  .
 

Sunday, March 27, 2011

சிங்கப்பூரில் கிளி ஜோதிடம்

ஆஸ்திரேலியப் பயணத்தை நிறைவு செய்து தாய்நாடு திரும்ப
பிரிஸ்பேன் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியது. சுத்த சைவம் என்பதால் இந்தியாவிலிருந்து செல்லும் போது விமானத்தில் எதுவும் சாப்பிடாதாததால் விமானப் பணிப்பெண் நீங்கள் திரும்பும் போது சைவ உணவு ஏற்பாடு செய்கிறோம் உங்கள் ரிட்டன் பயணச்சீட்டைத்தாருங்கள் இருக்கை எண்ணையும், தேதியையும் குறித்துக் கொள்கிறோம் என்று சொல்லி குறித்துக் கொண்டு , இப்போது அருமையான சைவ உணவு வழங்கினார்கள்.
ஒரு கால் இழந்த வெள்ளைக்காரர் ஒருவர் ஒரு நிமிடம் கூட இடைவெளி விடாமல் விமானப் பணிப்பெண்களிடம் கேட்டு பானமும் கொறிப்பதற்கான பண்டங்களும் கேட்டு சாப்பிட்டபடியே இருந்தார்.



முன் பக்கத்தில் குழந்தைகளுக்கான தொட்டில் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ஏதாவது அழும் குழந்தையோ, அடம் பிடிக்கும் குழந்தையோ கண்ணில் தென்பட்டால் அது இந்தியக் குழந்தையாக மட்டுமே இருந்தது ஆரய்ச்சிக்குரியது.



சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஸ்டாப் ஓவர் என்று அழைக்கப்படும் தங்கும் நேரம் பன்னிரண்டு மணிநேரமாக இருந்தது. சிட்டி டூர் என்று அழைத்துச் செல்கிறாகள். நான் உலகப்பிரசித்தி பெற்ற , புதுப் பொலிவுடன் இருந்த விமான நிலையத்தையே சுற்றிப்பார்க்க முடிவெடுத்தேன். ஏற்கெனவே ஒருமுறை செந்தோசா தீவு மற்றும் பல இடங்களைப் பார்த்துவிட்டதால், விமான நிலையத்தையே சுற்றி வந்தேன்.நாமே நினைத்தாலும் தொலைந்து போக முடியத பாதுகாப்பான இடமல்லவா??



இந்திய அரங்கு ஒன்று நம் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.மெகந்தி வைத்து அழகு படுத்தினார்கள். நிறைய ஆங்கிலேய பெண்களும், சில ஆண்களும் கூட வியப்புடன் மருதாணி போட்டுக்கொண்டார்கள்.



காதலன் படத்தில் பிரபுதேவா நக்மாவுக்குச் செய்து கொடுத்த கிலுகிலுப்பை போல் பனை ஓலையிலும், ஒயரிலுமாக செய்து அன்பளிப்பாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார்கள். அதுமட்டுமா? பழ்ங்கால ராந்தல் விளக்கு, பாத்திரங்கள் அடுக்கி கிராமத்து வீடு போல் அலங்கரித்து ,அங்கே அமரவைத்து படம் எடுத்து அப்போதே கையில் படத்தைக் கொடுத்து அசரவைத்தார்கள்.



கண்களையே நம்பமுடியவில்லை கிளிக்கூண்டுடன் ஜோதிடம் பார்க்கிறேன் என்றார். இ-மெயிலும், வந்த விமானத்தின் பெயரும் பதிந்து கொண்டு, கிளியைக் கூப்பிட்டு ஒரு சீட்டு எடுக்கச் சொன்னார். அது பல அட்டைச் சீட்டுகளைக் கலைத்துப் போட்டுவிட்டு, என் பெயருக்கான சீட்டை எடுத்துக்கொடுத்தது



அவர் என்னையே படித்துக் கொள்ளச் சொன்னார்.
நம் கிராமத்தில் கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டின் படமும், ஜோசியக்காரர் ராகத்துடன் படிக்கும், பலனும், அதை வாய்பிளந்து கேட்கும் மக்களுமாக சூழ்நிலையே கலக்கலாக இருக்குமே! இங்கோ !ஆங்கிலத்தில் பலன் எழுதியிருந்த நான்கு வரியைப் படித்ததும் சரியாக் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டார் - அவர் சிங்கப்பூரிலேயே பிறந்த இலங்கையைச் சேர்ந்தவராம்.ஆக்டோபஸ் ஜோதிடம் நினைவுக்கு வந்தது. அடுத்த முறை முயற்சிப்பார்களோ என்னவோ.



சில கணிணிகளும் அதற்கு மேல் காமிராவுமாக இருந்த இடத்தில் காமிராவைக் கிளிக் செய்துவிட்டு, இ மெயில் தட்டச்சு செய்தால் அடுத்த நொடி புகைப்படம்  அந்த மெயிலுக்குச் சென்றடைகிறது. 
அங்காங்கு இருந்த கணிணியில் இந்தியவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் சாட் செய்தேன். முப்பது நிமிடங்களில் கணிணி தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. காத்திருப்பவர் நமக்குப்பிறகு யாரும் இல்லாவிட்டால் மீண்டும் நாமே இயக்கலாம்.



கால் பிடித்துவிடும் இயந்திரம் ஆங்கங்கே இருக்கிறது. முப்பது நிமிடங்களுக்கு மேல் இயக்குவது ஆரோக்கியமானதல்ல என்று குறிப்பிடிருக்கிறார்கள்.
சுற்றிச்சுற்றி கால் அசரும் போதெல்லாம் நேரம் செட் செய்துவிட்டு கால்களுக்கு மசாஜ் செய்து கொண்டால் மீண்டும் நடக்க உற்சாகமாக இருக்கிறது.
மசாஜ் நிலையங்களில் மெனிகியூர்,பெடிகியூர், கழுத்து மசாஜ செய்ய கட்டணம் உண்டு. பயணக் களைப்பு, ஜெட்லாக் போன்றவற்றிற்கு நல்ல ரிலீப் கிடைக்குமாம்.



திரைப்பட அரங்கில் ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருக்க இருக்கையில் சிலர் தூங்கிக் கொன்டிருந்தார்கள்.
அரேபிய உடையுடனும்,பர்தாவுடனும் ஒரு கூட்டம் கடக்க, துபாய் செல்லும் விமானம் கிளம்பத்தயாரானது தெரிகிறது.
சீருடை அணிந்த ஜப்பானிய மாணவர்கள் தங்கள் ஆசிரிய வழிகாட்டியுடன் லண்டன் பயணத்திற்குத் தயாரானார்கள்.
சென்னை செல்லக் காத்திருந்த மாணவர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர்.



டிரேவலேட்டர்கள் மிகவும் வசதியாக இருக்கின்றன.அருமையான இயற்கைச் சூழலிலான பட்டாம்பூச்சி பூங்கா கண்ணயும் கருத்தையும் கவர்ந்தது.
காகடஸ் கார்டனில் கள்ளிச் செடிகளின் அணிவகுப்பு. கள்ளிக்கேது முள்ளில் வேலி ??



சூரியகாந்திப் பூங்கா சூர்யப் பிரகாசத்துடன் போட்டியிட்டு மலர்ந்து , முகம் மலர்ச்சியுறச் செய்தது.



காவேரி உணவகத்தில் சைவ உணவு கிடைக்கிறது. பில்டர் காபியும்.
கண்ணாடிச் சுவர்களின் வெளியே விமானம் இறங்குவதும்,புறப்படுவதுமாக காட்சிப்படுகிறது. மழை பெய்து சூழலை மேலும் அழகாக்குகிறது. 
விமான நிலயத்தில் வாங்கும் பொருள்களுக்கு சலுகை அறிவிப்புகளோடு கண்கவரும் விற்பனை நிலையங்கள் ஏராளம்.
ஸ்குரூக்கள் என்னும் விமான நிலையப் பணியாளருக்கான சிறிய ஜீப் போன்றும், இருசக்கர வாகனம் போலும் பணித்துக் கொண்டிருந்தன.
அதிநவீன தொலைக்காட்சிப்பெட்டிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளி பரப்பகிக் கொண்டிருக்க, மிக வசதியான இருக்கைகள் அமைத்திருக்கிறார்கள்.

Changi Airport Orchid Garden - Singapore, Singapore

மீன்களோடு குளமும் ,பாலமும், அழகிய இருக்கைகளும், பசுமையான சூழலுமாக மனம் கவர்கிறது. அந்த மீன் விலை மிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாஸ்து மீன் என்னும் அரவணா மீன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் விளயாட அருமையான விளையாட்டிடத்தில் மகிழ்ச்சியாக பல்வேறு தேசக் குழந்தைகள் விளயாடிக் களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வண்ண வண்ண  கிரையான்களும், காகிதங்களும் உலோக அச்சில் காகிதத்தை வைத்துத் தீட்டினால் உருவங்கள் தோன்ற குதூகலத்துடன் குழந்தைகள் கைவண்ணம் கண்டு மகிழ்கிறாகள்.

உலகின் சிறந்த விமான நிலையத்தில் மறக்க முடியாத நினைவுகள்.


Saturday, March 26, 2011

சிட்னி ஓப்ரா ஹவுஸ்







சிட்னி ஓப்ரா ஹவுஸ் என்னும் பிரம்மாண்ட கலைநயம் 
மிக்க அற்புதமான  ஆஸ்திரேலியாவின் கலைச் சின்னமாக 
விளங்கும் கட்டத்தை சுற்றிப்பார்த்தோம்.

Jørn Utzon, என்ற டென்மார்க் கட்டடக் கலைஞரால் 1957 ஆம் ஆண்டு கட்டட மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதம் 1959 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்த இந்த சிட்னி ஒபரா ஹவுஸ் 20 அக்டோபர் 1973 ஆம் ஆண்டு இராணி 2 ஆம் எலிசபெத்தால் திறந்து வைக்கப்பட்டது. 

உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 
3000 ஆயிரம் கச்சேரிகளை வழங்கி 2 மில்லியன் 
இரசிகர்களின் இசை உறைவிடமாகத் திகழ்கின்றது.


ஆஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாகத்திகழும் ஓப்ரா ஹவுஸ் சிட்னியின் மையமாக விளங்குகிறது.

ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணிமுதல் மாலை ஐந்து மணி வரை அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை சுற்றுலா வழிகாட்டல் மூலமாக சுற்றிக்காட்ட வசதி செய்து கொடுக்கிறார்கள்

பர்பாமென்ஸ் பாக்கேஜ் என்கிற தேர்வில் ஓப்ரா ஹவுஸ் சுற்றுலாவுடன் சிட்னியின் உயர்தர உணவக விருந்து அல்லது ஓப்ரா ஹவுஸ் அருகில் இருக்கும் நதியில் உல்லாச படகு உலா சென்று வர ஏற்பாடு செய்து தருகிறர்கள்.